தண்டவாளம் அருகே வேலி அகற்றப்பட்டதால் இளைஞர் உயிரிழந்த வழக்கு! – முன்னாள் SBB ஊழியரை விடுதலை செய்து சூரிச் உயர் நீதிமன்றம் தீர்ப்பு.
சுவிட்சர்லாந்தின் சூரிச் (Zurich) பகுதியில் ரயில் தண்டவாளத்திற்கு அருகே இருந்த பழுதடைந்த வேலியை அகற்றியதால், 20 வயது இளைஞர் ஒருவர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்த வழக்கில், கவனக்குறைவால் மரணம் விளைவித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட SBB (சுவிஸ் கூட்டாட்சி இரயில்வே) நிறுவனத்தின் முன்னாள் ஊழியரைச் சூரிச் உயர் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

கடந்த 2019-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், சூரிச்சின் ‘ஆப்ரூக்வெக்’ (Aubruggweg) பகுதியில் தண்டவாளத்தின் மீது சரிந்து விழும் அபாயத்தில் இருந்த சேதமடைந்த வேலியை அப்போதைய கிழக்கு பிராந்திய மேலாளர் அகற்றச் செய்திருந்தார். அதன்பின் எட்டு நாட்களுக்குப் பிறகு, கடுமையான அறிவுசார் குறைபாடு மற்றும் ஆட்டிசம் பாதிப்பு கொண்ட 20 வயது இளைஞர் ஒருவர், அருகிலிருந்த ஊஞ்சலில் விளையாடிக்கொண்டிருந்தபோது திடீரெனப் புல்வெளி வழியாகத் தண்டவாளத்திற்கு ஓடிச் சென்று ரயிலில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
கடந்த ஜூலை 2025-இல் சூரிச் மாவட்ட நீதிமன்றம் வழங்கிய விடுதலைத் தீர்ப்பை வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்திய உயர் நீதிமன்ற நீதிபதி, “ஒரு இரயில்வே நிறுவனம் முற்றிலும் ஆபத்து இல்லாத சூழலை உறுதி செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது; எல்லா இடங்களிலும் வேலி அமைக்க வேண்டும் என்ற பொதுவான கட்டாயமும் SBB நிறுவனத்திற்கு இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.
மக்கள் கூடும் இடமல்லாத அப்பகுதியில் ஏற்பட்ட இந்தத் துயரத்திற்கு, அந்த இளைஞருக்கு முறையான பராமரிப்பு கிடைக்காததும் சமூக நல அமைப்புகளின் தோல்வியுமே காரணம் எனக் குறிப்பிட்ட நீதிபதி, இதற்கு முன்னாள் SBB ஊழியரைப் பொறுப்பாக்க முடியாது எனத் தீர்ப்பளித்தார். இருப்பினும், இந்தத் தீர்ப்பை எதிர்த்து சுவிஸ் கூட்டாட்சி நீதிமன்றத்தில் (Federal Court) மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



