Swiss News In Tamil

மோட்டார் சைக்கிளில் அதிவேகம்! ஓட்டுநர் உரிமத்தை ஒரு வருடம் இழக்கிறார் அரசியல்வாதி!

4A 7

மோட்டார் சைக்கிளில் அதிவேகம்! ஓட்டுநர் உரிமத்தை ஒரு வருடம் இழக்கிறார் அரசியல்வாதி!

மணிக்கு 50 கிலோமீட்டர் வேக வரம்புள்ள பகுதியில்… 104 கிலோமீட்டர் வேகத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டிய சுவிஸ் அரசியல்வாதி சிக்கியுள்ளார்!

டிசினோ சமூக ஜனநாயகக் கட்சியின் இணைத்தலைவர் ஃபேப்ரிசியோ சிரிகா மீதே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஜூன் மாதத்தில் நண்பருடன் மோட்டார் சைக்கிளில் பயணம் மேற்கொண்டிருந்த அவர், உரி மாகாணத்தில் உள்ள வாசென் பகுதியிலிருந்து சுஸ்டன் கணவாய் நோக்கிச் சென்றபோது, 50 கி.மீ வேக வரம்புள்ள பகுதியில் 104 கி.மீ வேகத்தில் பயணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விதிமீறலுக்காக அவரது ஓட்டுநர் உரிமம் குறைந்தது ஒரு வருடத்திற்கு பறிக்கப்பட உள்ளது. மேலும், கணிசமான அபராதத்துடன் குற்றவியல் நடவடிக்கையும் எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட காணொளியில் சிரிகா, தனது தவறை ஒப்புக்கொண்டு பொதுமக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார்.

4A 7

இந்த சம்பவம் தனிப்பட்டதாக இருந்தாலும், தனது பொது அரசியல் பிம்பத்தையும் பாதித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

சுவிட்சர்லாந்தில் கடுமையான வேக மீறல்களுக்கு சிறைத்தண்டனை உட்பட கடுமையான சட்ட நடவடிக்கைகள் இருக்கலாம். இருப்பினும், சிரிகாவுக்கு முன்பு கடுமையான போக்குவரத்து விதிமீறல்கள் இல்லாததால், இறுதி தண்டனை எவ்வாறு அமையும் என்பது இன்னும் தெரியவில்லை.

அரசியல்வாதிகள் தொடர்பான அதிவேக சம்பவங்கள் சுவிட்சர்லாந்தில் புதிதல்ல.

ஆனால் 50 கி.மீ வேக வரம்பில் 104 கி.மீ வேகம்… அரசியல்வாதியின் இந்த ஒப்புதல் தற்போது டிசினோவில் பேசுபொருளாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *