Swiss News In Tamil

ரஷ்யாவிலிருந்து பரவும் தவறான தகவல் பிரச்சாரம் குறித்து சுவிட்சர்லாந்து கண்டனம்

ரஷ்யாவிலிருந்து தொடர்ந்து அதிகரித்து வரும் தவறான தகவல் (Disinformation) மற்றும் பிரச்சார நடவடிக்கைகளை கடுமையாக கண்டிப்பதாக சுவிட்சர்லாந்து பாதுகாப்பு அமைச்சர் மார்டின் பிஸ்டர் தெரிவித்துள்ளார்.

இந்த தவறான தகவல் பிரச்சாரங்கள், சுவிஸ் அரசியல் நிலைப்பாடுகளை பாதிக்கவும், பொதுமக்களிடையே அச்சம் மற்றும் குழப்பத்தை ஏற்படுத்தவும் மேற்கொள்ளப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

ரஷ்யா மேற்கத்திய நாடுகளை இலக்காகக் கொண்டு கலப்பு போர் (Hybrid Warfare) முறைகள் மூலம் தாக்கம் செலுத்துவது புதிய விடயம் அல்ல என்றும், அதனால் சுவிட்சர்லாந்தும் அதிகமாக பாதிக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“2022 ஆம் ஆண்டிலிருந்து சுவிட்சர்லாந்து மீது ரஷ்யா தாக்கம் செலுத்தும் நடவடிக்கைகளை அதிகரித்துள்ளது” என  பிஸ்டர் தெரிவித்துள்ளார். சுவிஸ் ஊடகத் துறை நிகழ்வொன்றில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

N7 3

ரஷ்யா, சுவிட்சர்லாந்து இனி நடுநிலை நாடல்ல, ஜனநாயகமற்றது, பாதுகாப்பற்றது போன்ற பொய்யான தகவல்களை பரப்புவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கு எடுத்துக்காட்டாக, கடந்த மே மாதம் ஜெனீவாவில் பதிவு செய்யப்பட்ட ஒரு காணொளியை சூழ்நிலைக்கு பொருந்தாத வகையில் வெட்டி, ரஷ்ய ஆதரவு சமூக வலைத்தள கணக்குகள் ஏழு சமூக ஊடக தளங்களில், சுவிட்சர்லாந்தின் அனைத்து அதிகாரப்பூர்வ மொழிகளிலும் ஒருங்கிணைந்த முறையில் பரப்பியதாக அவர் விளக்கினார்.

அந்த காணொளி “சுவிட்சர்லாந்து குழப்பத்தில் மூழ்குகிறது” என்பதுபோல் காட்ட முயற்சிக்கப்பட்டதாகவும், குறுகிய காலத்திலேயே அந்தக் காணொளியை 20 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் பார்வையிட்டனர் என பிஸ்டர் தெரிவித்துள்ளார்.

மேலும், ரஷ்யாவின் பிரபலமான தவறான தகவல் தளங்களான ‘ரஷ்யா டுடே’ மற்றும் ‘பிராவ்தா’ ஆகியவை மட்டும் மாதத்திற்கு 800 முதல் 900 வரையிலான கட்டுரைகளை சுவிட்சர்லாந்தை இலக்காகக் கொண்டு வெளியிடுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இத்தகைய கதைகள் கட்டுப்பாடின்றி தொடருமானால், ஒரு சமூகம் எளிதில் பாதிக்கப்படக்கூடியதாக மாறும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related Articles

Back to top button